புதன், 31 மே, 2017

பழமொழிகளும் எம் தமிழும்

உண்மையில் பழமொழிகள் எம் விஞ்ஞானம் என்று நாம் பெருமைப்படும் அளவுக்கு சிறப்பு வாய்ந்த சுருக்க விளக்கங்களாக தொன்று தொட்டு இருந்து வருகின்றன.மனோவியல் தொட்டு இயற்க்கை விஞ்ஞானம் வரை சமூக  விழுமியங்களுக்குள் ஊடுருவிய ஒரு நவீன கரு தான் பழ மொழி.

நவீன சமூகமே பலதையும் சுருக்கமாக விளங்கும் விதத்தில் இருப்பதனால் ,எமது பழ மொழிகளை,பழ மொழி என்பதா அல்லது நவீன உரையாடல் மொழி என்பதா என எனக்கு தோன்றுகின்றது.

எது எப்படி ஆயினும் சில பழ மொழிகளையும் அதன் விளக்கங்களையும் பார்ப்போம்.


நிறைகுடம் நீர் தளும்பாது
பொருள்
குடம் நிறைய  நீர்  இருக்கும் போது நீர் சலசலத்து வெளியே சிந்தாது.
அறிவு நிறைந்தவர்கள் சளசளவென்று நிறைய பேச மாட்டார்கள் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.
பொருள்
ஒரு மஹாகவியின் தாக்கம் அவர் வீட்டில் உள்ள பொருட்களிலும் பயிலும் என்பது செய்தி. அதாவுது, கம்பர் பாட்டால் தாக்குண்டு இன்னும் எழுதப் படாமல் காலியாக உள்ள கட்டுத் தறிகளும் கூட கவிபாடும்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி.
பொருள்
ஆண்டி என்பது ஒரு சிவனடியார் பெயர். அவன் காலையில் எழுந்ததும் சேகண்டியை அடித்துச் சங்கினை ஊதிக்கொண்டு உணவுக்காகப் பிச்சை எடுக்கக் கிளம்புவான். இளைப்பாறக் கோவில் திண்ணை அல்லது மடம். இப்படி ஓர் ஆண்டியை இரண்டு திருடர்கள் ஒருநாள் இரவு கூட்டாகச் சேர்த்துக்கொண்டு ஆடு திருடச் சென்றனர். ஆட்டுக்கிடையில்க் கீதாரிகள் என்றும் கீலாரிகள் என்றும் அழைக்கப்படும் இடையர் தலைவர் இருவர் காவல் காத்துக்கொண்டு குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தனர். இரண்டு திருடர்களும் ஆளுக்கு ஒரு ஆட்டைத் தூக்கித் தோளில் போட்டார்கள். ஆடுகள்மேஎன்று கத்த ஒரு திருடன், ’சங்கைப் பிடிடா ஆண்டிஎன்று சொன்னான். அவன் சொன்ன சங்கு ஆட்டின் கழுத்து. ஆண்டி பழக்கதோஷத்தில் தன் சங்கை எடுத்து ஊத, கீலாரிகள் விழித்துக்கொண்டு திருடர்களைப் பிடித்துவிட, ஆண்டி தப்பித்தான்!

முன்பின் பழக்கம் இல்லாதவர்களைக் கூட்டாக வைத்துக் கொண்டால் காரியத்தையே கெடுத்து விடுவார்கள் என்பது செய்தி.

எள்ளுதான் எண்ணைக்குக் காய்கிறது. எலிப் புழுக்கை என்னத்துக்கு காய்கிறது?
பொருள்
ஒன்றுக்கும் உதவாதவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் மத்தியில் உலவுவது எதற்காக? என்பது செய்தி.

ஒற்றைக் காலில் நிற்கிறான்.
பொருள்
விடா முயற்சியுடன் ஒரு கடினமான செயலைச் செய்பவன் குறித்துச் சொன்னது.
ஒற்றைக் காலில் என்றது அர்ஜுனன் கையால மலை சென்று சிவனைக் குறித்து ஒற்றைக்காலில் பாசுபத அஸ்திரம் வேண்டித் தவம் செய்ததைக் குறிக்கிறது.

பசி வந்தால் பத்தும் பறக்கும்.
பொருள்
 பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்றும் இந்தப் பழமொழி வழங்குகிறாது.

பறந்துபோகும் பத்து இவை: மானம், குலம், கல்வி, வண்மை (இங்கிதமான நடத்தை), அறிவுடமை, தானம், முயற்சி, தாணாண்மை (ஊக்கம்), காமம் (ஆசை), பக்தி.



எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
பொருள்
செட்டியானவன் (வணிகன்) பணத்தை எண்ணி மட்டும் கொடுப்பதில்லை; கொடுத்தால் திரும்ப வருமா என்பதையெல்லாம் தீர ஆலோசித்தே கொடுப்பான். மட்டி என்கிற மூடனானவன் பணத்தையும் விளைவுகளையும் எண்ணாமல் செயலில் இறங்குவதால் அவதிக்குள்ளாகிறான்.

நனைத்து சுமக்கிறதா?
பொருள்
பாரம் உலர்ந்திருக்கும்போது அதை சுமந்து செல்லாதவன் அது நனைந்து மேலும் சுமையானபோது வருந்தினானாம்.
இப்போதைக்குப் பெரிய கெடுதல் ஒன்றும் இல்லை என்பதற்காகத் தன் தவறுகளைக் களைவதை ஒத்திப்போட்டவனைக்குறித்துச் சொன்னது. வீட்டின் மராமத்து வேலகளை இப்போதைக்கு அவ்வளவு மோசம் இல்லை என்று ஒத்திப்போடுபவனுக்கும் இது பொருந்தும். முன்னவனுக்கு அவன் தவறும் பின்னவனுக்கு அவன் செலவும் நாளை பெரிய சுமையாகிவிடும் என்பது செய்தி.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
 பொருள்
ஒரு நொண்டியை எருதில்மேல் ஏறி உட்காரச்சொன்னால், எருதுக்குக் கோபம் வருமாம். உட்கார்ந்தபின் அவனைக் கீழே இறஙச்சொன்னால் அவனுக்குக் கோபம் வருமாம்.
மாமியார்-மருமகள் சண்டையில் எந்தப்பக்கம் பரிந்துபேசுவது என்று தெரியாமல் கணவன் இவ்வாறு சொன்னதாக செய்தி.

இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
 பொருள்
இமையின் குறைபாடுகளை அதன் கீழேயே உள்ள கண்ணால் பார்க்கமுடியாது.
அதுபோல, நம் மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக்கொண்டிருந்தாலும், நாம் அதன் கசடுகள் நமக்குத் தெரிவதில்லை

உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது
பொருள்
உழைக்காமல் இருந்து விட்டால் உடம்பில் தைரியம் இருக்காது.
சோம்பிக் கிடந்த மகனைப் பார்த்து உழைக்காத உடம்பு உரம் கொள்ளாது என்று தந்தை அறிவுரை கூறினார்.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
பொருள்
கருப்பாய் இருக்கும் தன் குஞ்சு கூட, காக்கைக்குப் பொன்னானதாகும்.
பிள்ளைகள் எப்படி இருந்தாலும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்தவர்களே

 குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
 பொருள்
குற்றம் செய்தவர்கள், குற்றவுணர்ச்சியினால் துன்புறுவர்.
கொலை செய்தவன் தண்டனை அனுபவித்தாலும், அவன் மனச்சாட்சி உறுத்தியதால் மனநோயாளி ஆனான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது முற்றிலும் உண்மையே.


 சுத்தம் சுகம் தரும்
பொருள்
தூய்மையின் அவசியத்தை குறிப்பிடும்போது சுத்தம் சுகம் தரும் என்பதால், நாம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
 தன் வினை தன்னைச் சுடும்
பொருள்
ஒருவர் செய்த தவறு அவரை அழித்து விடும்
தான் திருடுவது யாருக்கும் தெரியாது என்று நினைத்திருந்த வேலனுக்கு, அவனுடைய மகனும் திருடிப் பிழைக்கிறான் என்று தெரிய வந்தபோதுதான் தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணர்ந்தான்.
 பசி உள்ளவன் ருசி அறியான்
பொருள்
பசியில் உண்ணும்போது ருசியைப் பொருட்படுத்துவதில்லை.

 பல்லுப் போனால் சொல்லுப் போச்சு
பொருள்

பல் இல்லாமல் போனால் தெளிவாகப் பேச இயலாது. பற்களை இழந்த பிறகு பேசுவது யாருக்குமே சரியாகப் புரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக